வெள்ளி, 6 மே, 2011

பினாயக் சென்:ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி க. திருநாவுக்கரசு

1948, ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ‘‘மிக நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது இது’’ என்றார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. இந்தக் கூற்றின் நம் காலத்திய உதாரணம் டாக்டர் பினாயக் சென்னுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தேசவிரோதச் சட்டத்தின் கீழ்க் குற்றவாளிகள் என டாக்டர் பினாயக் சென் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கரின் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்தியக் காவல் துறை, நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கும்கூட இது அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருந்தது. ஒருவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கும்பட்சத்திலுங்கூட அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவது பொருத்தமற்றது (disproportionate) என்பது பல சட்ட நிபுணர்களின் கருத்து. ஆனால் பினாயக்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சத்தீஸ்கர் காவல் துறையினருக்கு அவர்மீது ஏற்பட்ட ஆதாரமற்ற வெறும் சந்தேகங்களின் அடிப்படையிலானவை என்பதற்கு மேல் எந்த மதிப்பையும் பெற முடியாதவை. குற்றவியல் நீதிமுறையின் (criminal justice) மிக அடிப்படையான தத்துவங்கள் அனைத்தையும் இந்தத் தீர்ப்பு மீறியிருக்கிறது. ஒரு குற்றவாளி தப்பிவிடலாம், ஆனால் நிரபராதி ஒருபோதும் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே உலகெங்குமுள்ள நீதிமன்றங்களால் கடைப்பிடிக்கப்படும் அடிப்படைத் தத்துவம். அதன் காரணமாகவே குற்றம் சாட்டப்பட்டவர் அது நிரூபிக்கப்படும்வரை குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும் என்பதும் சந்தேகத்தின் பலன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதும் நீதி வழங்கும் முறையில் ஏற்கப்பட்டுள்ள நெறிகள்.  

பினாயக் சென் வழக்கின் தீர்ப்பு இந்த நெறிகளுக்கு முற்றிலும் எதிரானது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த நெறிகளின் மீது விழுந்த சவுக்கடி என்றால் இந்தத் தீர்ப்பு அவற்றின் மீதான மரண அடி. இத்தகைய தீர்ப்பு நாட்டின் ஏதாவதோர் உயர் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருக்குமானால் அது இந்திய நீதித்துறைக்குச் சர்வதேச அரங்கில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும். சத்தீஸ்கர் காவல் துறையும் நீதி மன்றமும் செம்புலப் பெயல் நீர்போல் ஒன்று கலந்து, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் மனமறிந்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு இழைத்திருக்கும் அநீதியின் தீவிரத் தன்மையைப் புரிந்துகொள்ள டாக்டர் பினாயக் சென் பற்றியும் அவரது தன்னலமற்ற, அசாதாரணமான பணிகள் பற்றியும் இந்த வழக்கின் தன்மை குறித்தும் அறிந்துகொள்வது அவசியம்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான பினாயக் சென்னின் தந்தையும் மருத்துவர். அவர் ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றியபோது வேலூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் (Christian Medical College) பயின்ற ஒருவரைச் சந்தித்ததன் விளைவாகத் தன் மகனையும் சிஎம்சி நுழைவுத் தேர்வு எழுதச் சொன்னார். 1966ஆம் ஆண்டு பள்ளிக் கல்வியை முடித்தவுடன் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று சிஎம்சியின் மாணவரானார் சென்.
சிஎம்சியும் அதன் மருத்துவமனையும் சென்னின் வாழ்வை வடிவமைப்பதில் மிக முக்கியப் பங்குவகித்துள்ளன. சிஎம்சி அரசு உதவி பெறாத சிறுபான்மைக் கல்வி நிறுவனம் என்பதால் இங்கு மருத்துவப் படிப்புக்கு இருக்கும் 60 இடங்களில் சுமார் 10இலிருந்து 15 இடங்கள் மட்டுமே பொதுப்பிரிவின் கீழ் வருபவை. மற்றவை இந்தியாவின் பல்வேறு கிறித்துவ மிஷனரி நிறுவனங்களால் ஆதரவளிக்கப்படும் மாணவர்களுக்கானவை (sponsored candidates). எந்தப் பிரிவில் நுழைவுத் தேர்வு எழுதினாலும் வெற்றிபெறுவது என்பது மிகக் கடினமானது. பினாயக் இந்து, பொதுப்பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும். அதில் ஒருவர் வெற்றிபெறுவது என்பது அகில இந்திய ஐஐடி நுழைவுத் தேர்வில் முதலாவதாக வருவதற்குச் சமம் என சிம்எம்சி பேராசிரியர் ஒருவர் பினாயக் பற்றிக் குறிப்பிடும்போது கூறினார். அதே வருடம் பினாயக் ஐஐடி நுழைவுத் தேர்விலும் வெற்றிபெற்றிருந்தார் என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயமல்ல.
தந்தையைப் போல மருத்துவராவதையே தன் லட்சியமாகக்கொண்டிருந்தார் சென். இதே கல்லூரியில் குழந்தை மருத்துவத்திற்கான மேற்படிப்புப் படித்தார். பினாயக்கின் அறிவுக்கூர்மைக்கும் எம்பிபிஎஸ், எம்டி படிப்புகளில் அவர் எடுத்திருந்த மிக உயரிய மதிப்பெண்களுக்காகவும் அவருக்கு உலகின் எந்த மருத்துவமனையிலும் உயரிய பதவிகளும் பெரும் ஊதியமும் கிடைத்திருக்கும். The Road Not Taken கவிதையில் ராபர்ட் ஃப்ராஸ்ட் கூறுவதைப் போல் பினாயக் தேர்ந்தெடுத்த பாதை அதிகம் பயணம் செய்யப்படாத பாதை. அதுவே இன்று அவரை மாபெரும் ஆளுமையாகவும் பல லட்சக்கணக்கானவர்களுக்கான உந்துசக்தியாகவும் உதாரண மனிதராகவும் ஆக்கியிருக்கிறது.
பினாயக் எந்த அளவுக்குத் தன் மருத்துவத் தொழிலை நேசிக்கிறார், அதற்கு உண்மையாக இருக்கிறார் என்பதற்கு அவரது சகமாணவரும் தற்போது வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவருமான சாரா பட்டாசார்ஜி கூறும் ஒரு நிகழ்ச்சியே சாட்சி. சிம்எம்சியில் பணிபுரிந்தபோது தன்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு Lasix என்னும் மருந்தை எழுதித் தந்திருந்தார் சென். தொடர்ச்சியான 12 மணி நேரப் பணி முடிந்து சோர்வாக வீடு திரும்பும்போதுதான் அந்த நோயாளிக்கு அந்த மருந்துடன் சேர்த்துத் தர வேண்டிய supplement ஆன பொட்டாசியத்தை எழுத மறந்துபோனது அவரது நினைவுக்குவந்தது. உடனே மருந்தகத்திற்குச் சென்று பொட்டாசியத்தை வாங்கிக்கொண்டு, அந்த நோயாளியின் முகவரியைக் கண்டுபிடித்து எடுத்துக்கொண்டு தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் விசாரித்தபடி பல மைல் தூரத்திலிருந்த அந்த நோயாளி யின் கிராமத்திற்குச் சென்றார் பினாயக். இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகளை அவருடன் படித்தவர்களும் பின்னாளில் அவருடன் சத்தீஸ்கரில் பணிபுரிந்தவர்களும் கூறுகிறார்கள்.
அவருடன் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றி மிக உயர்வாகக் கூற ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா அமைப்பில் கடந்த இருபது வருடங்களாகப் பினாயக்குடன் இணைந்து பணியாற்றுபவரும் அவரது வழக்கறிஞர்களுள் ஒருவருமான சுதா பரத்வாஜ் (இவரும் அசாதாரணமான பின்னணி கொண்ட பெண்) கூறும் போது, ‘‘பினாயக்கைவிட அதிகக் கருணையுள்ளம் கொண்ட மனிதரை இந்த உலகில் பார்ப்பது அரிது. ஏற்றத்தாழ்வை முற்றிலுமாக வெறுப்பவர். ஒருவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்க மற்றொருவர் கீழே அமர நேரும் நிலையையேகூடப் பொறுத்துக்கொள்ள முடியாதவர் அவர்’’ என்கிறார். அத்தகைய மனிதராக இல்லாவிடில் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் அதை உதறிவிட்டு எங்கோ காட்டுப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களுக்குச் சேவை செய்யச் சென்றிருக்கமாட்டார்.
சமீபத்தில் பினாயக் குறித்து வெளிவந்த A Doctor to Defend: The Binayak Sen Story என்னும் புத்தகத்தின் ஆசிரியரான மின்னி வைத், சென்னிடம் அவரது அர்ப்பணிப்புணர்வு, அவரது தியாகம் பற்றிக் கேட்டபோது சென் அளித்த பதில் முக்கியமானது, ‘‘தியாகம், அர்ப்பணிப்பு என்ற வார்த்தைகள் தேவையற்றவை. நான் எந்தத் தியாகமும் செய்யவில்லை. ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கிறோம். அதற்கேற்பவே நம் விருப்பத் தேர்வுகள் அமைகின்றன. இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை’’ எனப் பதிலளித்தார் சென். மகாத்மா காந்தியிடம் உலகுக்கான அவரது செய்தி என்ன எனக் கேட்டபோது ‘‘என் வாழ்க்கையே என் செய்தி’’ என்றார். அதே வாசகத்தைச் சொல்லக்கூடிய தகுதி படைத்த வெகுசில மனிதர்களுள் டாக்டர் சென்னும் ஒருவர்.
1976-78 காலகட்டத்தில் புது தில்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம், சுகாதாரத்திற்கான சமூக மையத்தில் (Centre of Social Medicine and Community Health) பேராசிரியராகப் பணிபுரிந்த பினாயக்கும் அவருடைய மனைவி இலினாவும் அதற்குப் பின்னர் சத்தீஸ்கரின் டல்லி ராஜ்ஹாரா நகரில் இரும்புச் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பணிபுரியச் சென்றனர். இருவரும் ஏறக்குறையக் கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவம், மனித உரிமைகள், வளர்ச்சி (sustainable development) தொடர்பான சேவைகளில் ஈடுபட்டுவருகின்றனர். எவ்விதமான மருத்துவ வசதிகளும் கிடைக்கப் பெற வாய்ப்பற்ற நிலையில் இருக்கும் சத்தீஸ்கரின் ஏழை மக்களுக்காகப் பணிபுரிந்துவரும் பினாயக் சென் தம்பதிகளுக்குக் கிராமப்புற மக்களுக்கான மருத்துவச் சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொள்ளும் தன் முன்னாள் மாணவர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான ‘பால் ஹாரிஸன்’ விருதை வழங்கியது சிஎம்சி.
‘‘தான் பயின்ற கல்வி நிறுவனத்தின் இலட்சியத்திற்கும் கனவுக்கும் உண்மையானவராக இருந்துவருகிறார் டாக்டர் பினாயக் சென். நொறுங்கிப்போன, அநீதியான சமூகத்தில் ஒரு மருத்துவர் அளிக்கக்கூடிய பங்களிப்பின் சாத்தியங்களை அதிகபட்சமான அளவுக்கு விரிவுபடுத்தியிருக்கிறார். சொந்தப் பாதுகாப்பைவிடத் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளைப் பெரிதாக மதிக்கிறார். பினாயக் சென் மற்றும் அவர் மனைவி இலினா ஆகியோருடன் சிஎம்சி கொண்டுள்ள உறவுக்காக சிஎம்சி பெருமைப்படுகிறது. சிஎம்சி மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் உதாரண மனிதராக விளங்கும் அவர் சிஎம்சியின் அடிப்படை விழுமியங்களை வார்த்தைக்கு வார்த்தை பின்பற்றுவதன் மூலம் தனித்து நிற்கிறார்’’ எனப் புகழ்ந்துள்ளது சிஎம்சி.
1981இல் டல்லி ராஜ்ஹாரப் பகுதியில் செயல்பட்டுவந்த தொழிற்சங்கத் தலைவரான ஷங்கர் குகா நியோகியால் கவரப்பட்டு சத்தீஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்திலும் அதனுடன் இணைந்த கிராமப்புற வெகுமக்கள் இயக்கமான சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவிலும் பணிபுரியத் தொடங்கினார் சென். 1982இல் சுரங்கத் தொழிலாளர்கள் தங்களுக்கென ‘ஷாகித்’ என்ற பெயரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க முற்பட்டபோது அதை நிறுவுவதிலும் தொடர்ந்து நடத்துவதிலும் பினாயக் பெரும் பங்களித்துள்ளார். மிகக் குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சிகிச்சையைத் தர முடியும் என்பதை நிரூபித்த முயற்சி அது. 1991இல் நியோகி சுரங்க மாபியாக்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமைதியான முறையில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் ‘பிலாய் துப்பாக்கிச் சூடு நிவாரணக் குழு’வை அமைத்த சென் தொடர்ந்து பிலாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தொழிலாளர்களுக்காகப் பல்வேறு கிளினிக்குகளை நிறுவினார். 1994இல் ராய்பூரில் ஏழைகளின் மருத்துவச் சேவைக்காக ‘ரூபன்டார்’ என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் சுகாதாரப் பணியாளர்கள் பலரை உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சியளித்தார். தன் சமூக சுகாதாரத் திட்டத்தைச் சாலை வசதிகள்கூட இல்லாத பல்வேறு பழங்குடிக் கிராமங்களில் அமல்படுத்தினார். அவர் பயிற்சியளித்த சுகாதாரப் பணியாளர்களே கிளினிக்குகளை நடத்தினர். ஏழைப் பழங்குடி மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட தன்னலமற்ற மருத்துவர் ஒருவர்மீது சத்தீஸ்கர் மாநில பாரதீய ஜனதா கட்சியின் அரசாங்கத்திற்கு என்ன கோபம்?
ஏழ்மைக்கும் பிணிக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவையும் இவற்றுக்குக் காரணமான சமூக, அரசியல், பொருளாதார அடிப்படைகளையும் முழுமையாக அறிந்திருந்த சென் மனித உரிமைப் போராளியாகவும் இருந்ததில் ஆச்சரியமில்லை. 1970களில் ஜெயபிரகாஷ் நாராயணன் நிறுவிய குடிமை உரிமைகளுக்கான மக்கள்சங்கம் (People’s Union for Civil Liberties, PUCL) என்ற அமைப்பின் செயற்பாடுகளில் கடந்த 25 வருடங்களாகப் பங்கெடுத்து வருவதுடன் கடந்த சில வருடங்களாக பியூசிஎல்லின் சத்தீஸ்கர் மாநிலப் பொதுச்செயலாளராகவும் அகில இந்தியத் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
மாவோயிஸ்டுகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் எடுத்துவரும் பல நடவடிக்கைகள் ஜனநாயக விரோதமானவை. மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள், அவர்களைக் காட்டிக்கொடுக்க மறுப்பவர்கள் என்னும் பெயர்களில் அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சித்திரவதை செய்துவருகிறது ராமன் சிங் அரசு. ‘நக்சல்களை’ ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘சல்வா ஜூடும்’ என்னும் அமைப்பு அரசாங்கம் கூறிக்கொள்வதைப் போல மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தானாக உருவான ‘மக்கள் இயக்கம்’ அல்ல. பெரும் சுரங்க முதலாளிகளாலும் வர்த்தகர்களாலும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு உண்டு. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்படுகின்றன. மாத ஊதியமும் உண்டு. இவர்களது ஒரே வேலை மாவோயிஸ்டுகளையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் ஒழித்துக்கட்டுவதுதான். ஆனால் சல்வா ஜூடும் அப்பாவிப் பழங்குடி மக்களுக்கு எதிரான இயக்கமாக உருவெடுத்தது. Êசல்வா ஜூடுமின் வன்முறைகளால் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் வாழிடங்களைத் துறந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான அப்பாவிப் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர், ஊனப்படுத்தப்பட்டனர். காவல் துறையினருடன் இணைந்து பழங்குடிப் பெண்களின் மீது தொடர்ச்சியான பாலியல் வன் முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது இந்த அமைப்பு. பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட இத்தகைய அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர் பினாயக் சென். பன்னாட்டு நிறுவனங்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்பட்டதால் லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்தனர். இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கும் பழங்குடி மக்களின் இடப்பெயர்வுக்கும் எதிராக பியூசிஎல் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. அதன் மாநிலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் அத்தகைய போராட்டங்களில் சென்னின் பங்கு முக்கியமானது. பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாகச் செயல்படும் சத்தீஸ்கர் அரசின் செயல்களை அம்பலப்படுத்துவதில் சென் பெரும் பங்குவகித்தார். அவர்மீது சத்தீஸ்கர் அரசாங்கம் கோபம் கொண்டதற்கான காரணங்களில் இது முக்கியமானது.
இந்தப் பின்னணியில்தான் சென்னின் மீது தொடரப்பட்ட வழக்கையும் அதன் மீதான தீர்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும். 2007 மே 1ஆம் தேதி (காவல் துறையின் கூற்றுப்படி மே, 6ஆம் தேதி) பியூஷ் குகா என்ற கொல்கத்தாவைச் சேர்ந்த பீடி இலை வர்த்தகர் கைதுசெய்யப்பட்டார். மே 6ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அதே மே, 14ஆம் தேதி பிலாஸ்பூரில் பினாயக் சென் கைதுசெய்யப்பட்டார். ஜூலை மாதம், ஒரு கொலை வழக்கில் கைதாகி விசாரணைக் கைதியாக பிலாஸ்பூர் சிறையில் இருக்கும் நாராயண் சன்யால் என்பவர் சென்னுக்கு எதிரான வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த மூவருக்கும் எதிரான குற்றப்பத்திரிகை ஆகஸ்ட் 2007இல் பதிவுசெய்யப்பட்டது. வழக்கு விசாரணை 2007 டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. இந்த மூவர்மீதும் காவல் துறை கூறிய குற்றச்சாட்டு இதுதான்: சிறையிலிருக்கும் மாவோயிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான நாராயண் சன்யாலிடமிருந்து அவரைச் சந்திக்க வந்த டாக்டர் சென் கடிதங்களைப் பெற்று அவற்றை பியூஷ் குகா என்பவரிடம் சேர்ப்பித்து அவர் மூலம் அக்கடிதங்களை மாவோயிஸ்டு இயக்கத்தின் பிற உறுப்பினர்களிடம் சேர்ப்பிக்க உதவினார்; மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் சேர்ந்து அரசுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டினார். இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க சத்தீஸ்கர் மாநில அரசாங்கம் பல்வேறு சதிகளில் ஈடுபட்டது.
சிறையில் உடல்நலமின்றிப் பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளுடன் இருந்த சன்யாலை மருத்துவர் என்ற முறையிலும் பியுசிஎல்லின் தலைவர்களுள் ஒருவர் என்ற முறையிலும் சென் பலமுறை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புகள் அனைத்தும் சிறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்று நடந்தவை. சென் தன்னை சன்யாலின் உறவினர் எனக் கூறிக்கொண்டு சந்தித்ததாகக் காவல் துறை நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் இது பொய் என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சிறை அதிகாரிகளிடமிருந்து இலினா சென் பெற்ற ஆவணங்கள் நிரூபிக்கின்றன. தன் சந்திப்புகளுக்கான வேண்டுகோள்களைத்தான் சார்ந்திருக்கும் பியுசிஎல் முகவரியடங்கலில் (letterhead) அந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் என்ற முறையிலேயே எழுதித் தந்துள்ளார் சென். நீதிமன்ற விசாரணையின்போது கடிதப் பரி மாற்றத்திற்குச் சாத்தியமே இல்லை என்பதையும் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சன்யால், சென் சந்திப்பு எப்போதுமே சிறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே நடந்தது. இந்த நிலையில் கடிதம் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு எங்கிருந்து வந்தது? காவல் துறை ஆதாரமாகச் சமர்ப்பித்த கடிதங்களில் காணப்படும் விஷயங்களில் எந்த வகையிலும் அரசுக்கு எதிரான சதியில் சென் ஈடுபட்டதற்கான தடயங்கள் இல்லை.
தனக்கு அளிக்கப்பட்ட மருத்துவ உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, பியூசிஎல்லின் மாநாடு வெற்றிகரமாக நடந்ததற்குத் தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பது என்பவையே சன்யாலின் கடிதங்களின் உள்ளடக்கம். அவை அரசைக் கவிழ்ப்பதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கு உதவியிருந்து அல்லது பெரும் வன்முறையைத் தூண்டுவதற்குக் காரணமாக அமைந்திருந்து அதைக் கடத்தியது சென் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே சென் தண்டனைக்குரியவராவார். ஆனால் அப்படி எதுவும் அவற்றில் இல்லை. மற்றொரு முக்கிய ஆதாரமாகக் காவல் துறை காட்டுவது மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக் குழு எழுதிய கடிதம். இதில் சென் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்ற விவரமே அதில் இல்லை. அதில் யாருடைய கையொப்பமும் இல்லை. இக்கடிதம் சென் வீட்டில் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறை கூறுகிறது. ஆனால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலில் இந்தக் கடிதம் இடம்பெறவில்லை. கைப்பற்றப்பட்ட பிற ஆவணங்களில் சென்னின் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கடிதத்தில் சென்னின் கையெழுத்து இல்லை என்பதுடன் கைப்பற்றிய அதிகாரியின் கையெழுத்தும் இல்லை. இது காவல் துறையின் இடைச்செருகல் என்பதில் சந்தேகமில்லை. இது பிற ஆவணங்களுடன் ஒட்டிக்கொண்டிருந்திருந்த காரணத்தால் கையெழுத்துப் பெறுவது தவறியிருக்கலாம் எனக் காவல் துறை கூறிய சப்பைக் கட்டை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டது. ஆக சன்யாலிடமிருந்து கடிதங்களைப் பெற்று அதை பியூஷ் குகாவிடம் சென் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மேலும் பியூஷ் குகாவும் சென்னும் சந்தித்துக்கொண்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. கொல்கத்தாவைச் சேர்ந்த பீடி இலை வர்த்தகரான பியூஷ் குகாவுக்கும் மாவோயிஸ்டு இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாவோயிஸ்டுகளும் குகா பற்றி அதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் Kafkaesque என்பார்கள், பிரான்ஸ் காஃப்காவின் கோட்டை, விசாரணை ஆகிய நாவல்களின் நாயகன் எதிர்கொள்ளும் புதிரான கைது, முடிவற்ற விசாரணையைக் குறிக்கும் வார்த்தை அது. குகாவின் கைது அத்தகைய ஒன்றோடு ஒப்பிடத் தகுந்தது. சன்யால், சென் விஷயத்தில் சத்தீ ஸ்கர் அரசாங்கத்திற்கு உள்நோக்கம் இருக்கிறது. ஆனால் குகா பாவம் பகடைக்காய் (pawn) மட்டுமே. பியூஷ் குகாவும் சென்னும் சந் தித்துக்கொண்டதைப் பார்த்ததாக நீதிமன்றத்தில் சாட்சியம் கூறும்படி அழைத்துவரப்பட்ட பியூஷ் குகா தங்கியிருந்த ஓட்டல் மேலாளர்கள் நீதிமன்றத்தில் சென்னைப் பார்த்ததேயில்லை என்று கூறிவிட்டனர். மாவோயிஸ்டு பத்திரிகைகள் சிலவும் சன்யால் எழுதிய சில கடிதங்களும் குகாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறை கூறுகிறது. ஆனால் அவை காவல் துறையால் கொண்டுவரப்பட்டுத் தன்மீது திணிக்கப்பட்டவை எனக் குகா கூறியதை நீதிபதி ஏற்கவில்லை.
காவல் துறைத் தரப்பு சாட்சியான அனில் சிங், காவல் துறைக் கடிதங்களையும் பத்திரிகைகளையும் ‘கைப்பற்றிய’ சமயத்தில் அங்கிருந்தவர் அல்ல. குகாவுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்களைத் தான் அந்த வழியே சென்றபோது கேட்க நேர்ந்ததாக அனில் கூறினார். ஆக குற்றம்சாட்டப்பட்ட இருவரது கூற்றுக் களையும் ஏற்றுக்கொள்ளாத நீதிபதி வழிப்போக்கர் ஒருவரின் சாட்சியத்தை வேதவாக்காக ஏற்றுக்கொள்கிறார். சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் நடத்தப்படும் வழக்கில் சான்றுகளின் நம்பகத்தன்மை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கில் நடந்தது நேரெதிரானது. வெறும் சந்தேகங்களே ஆதாரமாகக் கொள்ளப்பட்டுவிட்டன. 2007 மே, ஏழாம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் மே ஒன்றாம் தேதி மகிந்ரா ஓட்டலில் கைதுசெய்யப்பட்டதாகவும் ஆறு நாட்கள் தொடர்ந்து கண்ணைக் கட்டிவைக்கப்பட்டிருந்ததாகவும் குகா கூறினார். ஆனால் இந்தக் கூற்றுக்கான ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை எனக்கூறி நீதிபதி அதை நிராகரித்தார். இதன் மூலம் ஆதாரங்களைத் திரட்டுவது குற்றம்சாட்டும் தரப்பின் பொறுப்பே தவிர குற்றம்சாட்டப்பட்டவரின் பொறுப்பல்ல என்ற சட்டவியலின் அடிப்படை அரிச்சுவடியைக்கூட நீதிபதி புறக்கணித்தார். மற்றொரு முக்கியமான விஷயம், உச்ச நீதிமன்றத்தில் பினாயக்கின் ஜாமீன் மனுவை எதிர்த்த காவல் துறையும் குகாவை மகிந்ரா ஓட்டலில் வைத்துக் கைது செய்ததாகவே கூறியிருந்தது. ஆனால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவரை ஸ்டேஷன் ரோட்டில் வைத்துக் கைதுசெய்ததாகவும் அப்போது அந்த வழியே போய்க் கொண்டிருந்த அனில் சிங்தான் தாங்கள் கைப்பற்றிய பொருட்களுக்கு நேரடி சாட்சி என்றும் கூறியது. காவல் துறை உச்ச நீதி மன்றத்திடம் கூறியதற்கும் தன்னிடம் கூறியதற்கும் உள்ள முரண்பாட்டை நீதிபதி முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டார். காவல் துறை வைத்த சாட்சியங்களிலும் ஆதாரங்களிலும் பல ஓட்டைகள் தென்படுகின்றன. ஓரேயொரு ஒட்டை இருந்தால்கூடக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
தவிர பினாயக் சென் மாவோயிஸ்டு இயக்கத்தின் உறுப்பினர் என்பதற்கோ அதன் ஆதரவாளர் என்பதற்கோ அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவினார் என்பதற்கோ எந்த ஆதாரத்தையும் காவல் துறையால் காட்ட முடியவில்லை. இன்னும் பல வேடிக்கையான வாதங்கள் அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டன. வழக்கின் கடைசிக் கட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர், சென்னின் மனைவி இலினா சென் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புகொண்டிருப்பதாகவும் அவர் ஐஎஸ்ஐ அமைப்பில் உள்ள பெர்னான்டஸ் என்பவருக்கு அனுப்பிய மின்னஞ்சல் அதற்கு ஆதாரமாக இருப்பதாகவும் கூறி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். ஆனால் அது பாகிஸ்தானின் உளவு நிறுவனம் அல்ல. தில்லியில் இருக்கும் ஐஎஸ்ஐ (Indian Social Institute) என்ற சமூக ஆராய்ச்சி மையத்தின் பெயரோடு பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பெயரை முட்டாள்தனமாகக் குழப்பிக்கொண்டுவிட்டது காவல் துறை. அதன் இயக்குநர் வால்டர் பெர்னான்டஸுக்கு இலினா அனுப்பிய மின்னஞ்சல்தான் அந்த ‘ஆதாரம்’. இதைவிட வேடிக்கை, கார்ல் மார்க்ஸின் ‘மூலதனம்’ புத்தகத்தை டாக்டர் சென் படித்திருப்பதை அவர் மாவோயிஸ்டு என்பதற்கான ஆதாரமாக அரசுத் தரப்பு முன்வைக்கும் அளவுக்கு வழக்கில் நகைச்சுவை மிளிர்ந்தது. ஆனால் தீர்ப்போ படுபயங்கரமானதாக இருந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைமுறைகள் நேர்மையாக நடைபெற்றிருக்கும்பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்ட மூவருமே எப்போதோ விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். தொடக்கக் கட்டத்திலேயே தள்ளுபடியாகியிருக்க வேண்டிய வழக்கு இது. ஆனால் 2010 டிசம்பர், 24ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ராய்பூர் செஷன்ஸ் நீதிபதி பி.பி. வெர்மா, குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் பினாயக் சென், பியூஷ் குகா, நாராயண் சன்யால் ஆகிய மூவரும் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124(எ), 120(பி) ஆகியவற்றின் கீழும் சத்தீஸ்கர் சிறப்புப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் 2005, 8(1), 8(2), 8(3), 8(5) ஆகிய பிரிவுகளின் கீழும் சட்டபூர்வமற்ற நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 பிரிவு 39(2) இன் கீழும் தேசத்துரோகம், சதித் திட்டம் தீட்டிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை தவிர ஒரேசமயத்தில் அனுபவிக்க வேண்டிய குறைந்த காலச் சிறைத் தண்டனைகளையும் அளித்து உத்தரவிட்டார். தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124(எ) அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான வகையில் விளக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் 1962இல் கேதர்நாத் சிங் வழக்கில் தெளிவாகக் கூறியுள்ளது. நேரடியாகப் பெரும் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு, அல்லது பொது அமைதிக்குப் பெருமளவில் ஆபத்து ஏற்படுத்துகிறவர்களுக்கு எதிராக மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. சென் ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டவரோ அதற்கு ஆதரவு தெரிவித்தவரோ அல்லர். மாவோயிஸ்டுகளின் வன்முறையால் சமூக மாற்றங்களைக் கொண்டுவருவது சாத்தியமல்ல என்பதையும் வன்முறைப் போராட்டத்தின் பயனற்ற தன்மையையும் குறித்த தன் நிலைப்பாட்டை சென் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்.
‘தேசத்துரோகச் சட்டம் ஆங்கிலேயரால் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம். அது மிகவும் அருவருக்கத் தக்கது எனவும் அதற்கு ஒரு சுதந்திர நாட்டில் இடமிருக்க முடியாது’ எனவும் எவ்வளவு விரைவில் அது நீக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அது நல்லது எனவும் 1951இல் ஜவகர்லால் நேரு கூறினார். ஆனால் வெகு சில சிறிய மாற்றங்களுடன் அந்தச் சட்டம் இன்றுவரை தொடர்கிறது.
மகாத்மா காந்தி முதல் அருந்ததி ராய், டாக்டர் பினாயக் சென் வரை பல்வேறு ஆளுமைகளுக்கு எதிராக அந்தச் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரான சிம்ரஞ்சித் சிங்மானுக்கு எதிராகத் தேசத்துரோக வழக்கு 50 முறை தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறைகூட அவர் தண்டிக்கப்பட்டதில்லை. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட அன்று அரசாங்க அலுவலகத்தில் காலிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமெழுப்பிய இரு சீக்கிய அதிகாரிகளுக்கு எதிராகவும் இதே சட்டப் பிரிவு பிரயோகிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வருடச் சிறைத் தண்டனை அளித்தது. ஆனால் அவர்கள் எழுப்பிய முழக்கங்களால் நாட்டின் ஒற்றுமைக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடவில்லை எனக் கூறி அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 1995இல் தள்ளுபடி செய்தது. ஆக முன்னுதாரணமாக இவ்வளவு தீர்ப்புகள் இருந்தும் அவை அனைத்தையும் நீதிபதி வெர்மா புறந்தள்ளிவிட்டார். இவ்வளவு முக்கியமான வழக்கில் தகுதிகான் பருவத்தைக்கூட (probation period) முடிக்காத வெர்மாவை விசாரணை நீதிபதியாக நியமித்ததைக் கண்டித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரசுத் தரப்புடன் நீதிபதி கைகோத்துச் செயல்பட்டிருப்பது அவரது தீர்ப்பிலிருந்தே தெளிவாகத் தெரிவதால் அவர்மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
2007 மே 14ஆம் தேதி கைது செய்யப்பட்டது முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு பிணை (bail) கிடைப்பதற்காக செஷன்ஸ் நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய சென்னுக்குத் தொடர்ந்து தோல்விகளே கிட்டின. முதல் ஒரு வருடம் இவரது வழக்கு நாட்டின் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. உலக சுகாதாரம், மனித உரிமைகளுக்கான 2008ஆம் ஆண்டின் ‘ஜோனதன் மான்’ விருதுக்காக உலகப் புகழ் பெற்ற அமைப்பான உலக சுகாதாரக் கவுன்சில் (Global Health Council) முதல்முறையாக இந்தியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தது. அவர் பினாயக் சென். 2008 மே 29ஆம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை சென் நேரடியாகப் பெற்றுக்கொள்ளவும் அவர் ஆற்றி வரும் மருத்துவப் பணிகளைத் தொடரவும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என மருத்துவம், வேதியியல், பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு பெற்ற சர்வதேச அளவிலான அறிஞர்கள் 22 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று 2008ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய சட்ட அமைச்சர், சத்தீஸ்கர் மாநில ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டது. இது சென் பயின்ற கல்லூரியான சிஎம்சி எடுத்த முயற்சிகளின் பயன். இதற்குப் பிறகு இந்தியாவில் சென் பக்கம் கவனம் திரும்பியது. நாடெங்கிலும் சென்னுக்கு இழைக் கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு கிடைத்தது. பின்னர் இரண்டாம் முறையாக உச்ச நீதிமன்றத்தை அணுகியபோதே 2009 மே 25ஆம் தேதி சென் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு வேண்டுமென்றே மிக மெத்தனமாக நடத்தப்பட்டது. தன் பெற்றோர் இறந்தபோது (கடந்த மூன்று வருடத்தில் குகாவின் தாய், தந்தை இருவருமே இறந்துவிட்டனர்) அவர்களுக்கான இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்குக்கூட அனுமதிக்கப்படாத பியூஷ் குகா, வழக்கு வேகமாக நடத்தி முடிக்கப்பட வேண்டுமென 2010 அக்டோபரில் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அப்போது உச்ச நீதிமன்றம் அடுத்த மூன்று மாதத்திற்குள் வழக்கு முடிவுக்கு வர வேண்டும் என உத்தரவிட்டதன் காரணமாக வேகமாக நடத்தப்பட்டு 2010 டிசம்பர் 24ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. இப்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் போக வேண்டிய அவசியமில்லாமல் செஷன்ஸ் நீதிமன்றம் இழைத்த இமாலய அநீதியை உயர் நீதிமன்றமே சரிசெய்யும் என்பதே மிகப் பெரும் சட்ட நிபுணர்கள் முதல் சாதாரண மக்கள்வரையில் அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது. சில சமயங்களில் நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை.
தன் நடவடிக்கைகள் காரணமாக சிறு வட்டத்துக்கு மட்டுமே அறிமுகமாயிருந்த டாக்டர் பினாயக் சென் இந்த வழக்கின் விளைவாக மாபெரும் ஆளுமையாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உதாரண மனிதராக, நாயகராக உருவெடுப்பார் என்பதை சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் யூகிக்க முடிந்திருந்தால் இந்த வழக்கே தொடரப்பட்டிருக்காது. இவ்வளவு அநீதிக்குப் பின்னரும் விளைந்த பலன் இது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவ ஞானியும் அறிவியல் அறிஞருமான ஜியோர்டேனோ புரூனோ, கத்தோலிக்க மதத்துக்கு எதிராகப் பேசியதற்கும் அறிவியல் கருத்துகளை பரப்பியதற்கும் திருச்சபை அவர் மீது வழக்கு தொடுத்தது. ஏழு வருட விசாரணைக்குப் பின்னர் நீதிபதிகள் புரூனோ தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டுமெனத் தீர்ப்பளித்தனர். தீர்ப்புக்குப் பதிலளித்துப் புரூனோ சொன்ன வார்த்தைகள் இறவாப் புகழ்பெற்றவை:
‘‘நீதிபதிகளே, இந்தத் தண்டனையைப் பெறும் என்னைவிட அதிக அச்சத்தில் இந்தத் தண்டனையை அளிப்பவர்களான நீங்கள் இருக்கிறீர்கள்.’’
இப்போது அச்சத்தில் இருப்பது சத்தீஸ்கர் அரசாங்கமே, டாக்டர் பினாயக் சென் அல்ல. =
Thanks     Kalachuvadu 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக